திங்கள், 31 மே, 2010

தண்ணீர் தேவை
அமெரிக்காவில் வசந்தம்/கோடை தொடங்கிவிட்டதால் எங்கும் சிறுவர்கள் விளையாட்டும், உடற்பயிற்சிக்காக ஓடுபவர்கள், நடப்பவர்கள் என்று வாழ்க்கை சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டது.பூத்துக்குலுங்கும் செடிகளும் மரங்களும் கூவி பாடும் பறவைகளுமாய் வாழ்க்கையின் இனிமைக்காலம் இது. பசுமையான புல்வெளியும் பூக்கள் நிறைந்து வாசனையுடன் கூடிய தோட்டமும் வீட்டிற்கும் ஒரு அழகைத்தந்திருக்கிறது. உடல் இயக்கங்கள் அதிகரிக்க நீர் பருகும் தேவை அதிகமாகிவிட்டது.

ஒரு மனிதனின் உடல் எடையில் 2 இல் மூன்று பங்கு தண்ணீர் இருக்கிறது. கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். எனவே பெண்கள் 52% நீரும் ஆண்கள் 60 சதவிகிதம் நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர் அலவும் குறைவாக இருக்கும். ஒரு 150 பவுண்டு எடை உள்ள மனிதன் கிட்டதட்ட 10 காலன் தண்ணீர் இருக்கிறது. அதில் 7 காலன் செல்களில் இருக்கிறது, இன்னும் இரண்டு காலன் திசுக்களிலும் ஒரு காலன் இரத்தத்திலும் இருக்கிறது. தண்ணீர் உடலில் ஒவ்வொரு பாகமும் சரிவர இயங்க காரணம் எனவே தேவையான அ ளவு இருக்கும் வரை உடலினுள் ஓடிக்கொண்டே இருக்கிறது.

தண்ணீர் இழக்கும் அளவு அருந்த வேண்டியது அவசியம். இல்லை எனில் தண்ணீர் இழப்பு (dehydaration) ஏற்பட்டு உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கும் உடலின் நச்சுப்பொருட்கள் வெளியேறாமலும் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 8 கோப்பை தண்ணீர் அருந்துவது மிக அவசியம். அதிக அளவில் அருந்துவதால் எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீரகங்கள் அவற்றை சிறுநீராக்கி வெளியேற்றிவிடும். எனவே அதிக தண்ணீர் குடிப்பதை பழகிக்கொள்ள வேண்டும்.

உடலுக்கு தண்ணீர் அருந்துவதாலும் சில உணவுப்பொருட்களை செரிக்கும் போது உப பொருளாக உற்பத்தியாவதாலும் கிடைக்கிறது. அதிக உடல் பயிற்சியின் போதும் வெளியே வெப்ப நிலை அதிகம் இருக்கும் போது தண்ணீர் வியர்வையாய் உப்புடன் சேர்ந்து வெளியேறுகிறது. வியர்வை ஆவியாகி வெளியேறும்போது உடலின் வெப்பத்தை உபயோகிப்பதால் உடல் குளிர்ச்சி அடைகிறது. அதே சமயம் குளிர் அதிகம் இருக்கும் போது சிறுநீராக அதிக அளவில் வெளியேறுகிறது. அதிக அளவில் வாந்தி எடுத்ததலும் வயிற்று போக்கு ஏற்பட்டாலும் தண்ணீர் வெளியேறுவதால் உடனே நிறைய நீர் குடிக்க வேண்டியது அவசியமாகிறது.

சோடியம் பொட்டாசியம் போன்ற சில மிக முக்கியமான தனிமங்கள் நீருடன் சேர்ந்து வெளியேறுவதால் இவை உடலின் அமில காரத்தன்மை மற்றும் நீரின் அளவை சரியாக வைத்திருக்க அதிக நீர் அருந்துவது அவசியமாகும். உடலும் இந்த மின்ணுக்களின் அளவை சரியாக்கி கொள்ள மிகவும் உழைக்கிறது. உதாரணமாக அதிக சோடியம் மின்னணு உடலில் சேர்ந்துவிட்டால், உடனே தாகம் எடுத்து நாம் நீர் அருந்தி அதை சரிப்படுத்துவோம். உடனே மூளை சிறுநீரகத்திற்கு ஒரு செய்தி அனுப்பி, சிறுநீர் வெளியேறுவது குறைந்து சோடியம் அளவு சரியாகிவிடும். சோடியம் அளவு குறைவாக இருந்தால், சிறுநீர் அதிகமாக வெளியேறி இரத்ததில் நீரின் அளவைக் குறைந்து, சோடியம் அளவை சரிப்படுத்துகிறது. தாகம் எடுப்பது உடலின் நீர் அளவு குறைந்திருப்பதைக்காட்டுகிறது. அதேபோல பிட்யூட்டரி என்ற உறுப்பும், சிறுநீரகமும் தண்ணீர் மின்னணுக்கள் அளவை சரியாக அவைத்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

தண்ணீர் சமன்பாடு
உடலில் தண்ணீர் அளவு குறையும் போது மூளை வாசோப்பெரெஸின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது சிறுநீரகங்கள் அதிக சிறுநீர் வெளியேற்றுவதை தடுக்கிறது. உடலில் தண்ணீர் குறையும் போது திசுக்களில் உள்ள தண்ணீர் செல் சவ்வுகளில் இருந்து வெளியேறி இரத்தத்தில் கலக்கிறது. தண்ணீர் அளவு அதிகமாகும் போது இரத்ததில் இருந்து திசுக்களுக்கு உள்ளே சென்று தண்ணீர் அளவை கட்டுப்படுத்துகிறது.

சில சமயம் அல்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் சரிவர சுரக்காமல் போகும் போது தண்ணீர் வெளியேறி மனிதன் இறக்கும் நிலை கூட வரலாம். இதற்கு நீரிழிவு இன்ஸிபெடஸ் என்ற பெயர்.

மிக சிறிய கைக்குழந்தைகள், அதிலும் பிரசவ காலத்திற்கு முன்னே பிறந்தவர்கள், வயதானவர்கள் நீர் சரிசம நிலையில் வைத்திருக்க முடியாமல் சங்கடப்படுவார்கள். அதே சமயம் மருத்துவமனையில் இரத்த சிறைகள் மூலமாக நீர் செலுத்தினால் அதிக நீர் சேர்ந்து பிரச்சினை வரும். எனவே வீட்டிலேயே கொஞ்சம் கொஞ்சமாக நீர் அருந்துவது அவசியமாகும்.

வயதானவர்கள் தண்ணீர் இழக்கும் போது குழப்பம், தெளிவின்மை போன்றவற்றிற்கு ஆளாவதால் தனியாக கோடை காலங்களில் வெளியே செல்லும் போது கவனம் தேவை. தாகம் எடுப்பதை உணரக்கூட முடியாமல் வயதாக வயதாக திண்டாட நேரிடும். எனவே அவர்களை பார்த்துக்கொள்பவர்கள் பார்த்து நீர் தருவது அவசியமாகும். தாகம் எடுப்பதை உணர முடியாமல் தண்ணீர் அளவு குறைந்து போய் இவர்கள் கஷ்டப்படலாம். அப்போது சிறுநீர் வெளியேறுவது குறைந்துவிடும் எனவே சிறுநீரக கற்கள் உண்டாகும் சாத்தியம் அதிகமாகிறது. வியர்ப்பது குறைந்து சோடியம், யூரியா போன்றவை உடலிலேயே தங்கிவிடும். இன்னும் அதிக நீர் இழப்பு இருந்தால் திசுக்கள் சுருங்கி சரிவர வேலை செய்யாது. மூளை இதயம் சிறுநீரகங்கள் சரிவர வேலை செய்ய இயலாது. எல்லா உறுப்புகளும் ஒருவித அதிர்ச்சிக்கு உட்பட்டு இறக்க நேரிடும். அதிக கோடை காலம், உடற்பயிற்சி போன்ற சமயங்களில் தண்ணீர் அருந்துவது மிக முக்கியம். தண்ணீர் அருந்தி உடலை மென்மையாக வைத்திருப்பது எளிதானது. அதேபோல நீரின் அளாவு அதிகமாகும் போதும் சோடியம் பொட்டாஸியம் போன்ற மின்னணுக்கள் அளவு குறைந்து இரத்தம் நீர்த்து போய் பிரச்சினைகள் வருகின்றன. திசுக்கள் நீர் அதிகம் கொண்டு சரிவர வேலை செய்வதில்லை. இந்த பிரச்சினைகள் சிறுநீரக குறைபாட்டால் ஏற்படலாம்.

அதிக மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இருப்பவர்கள் அதேபோல நீர் அருந்துவதும் முக்கியம். மருந்துகளில் தேவை இல்லாத வேதிப்பொருட்களை கல்லீரல் நீரில் கரைத்தே வெளியேற்றுகிறது.

நீர் அருந்தும் போது அதை காப்பி, தேநீர், கோக், பெப்ஸி போன்ற குளிர்/சூடான பானங்களால் நிரப்ப நினைத்தால் அது தவறானது. தேநீர் காப்பி போன்ற பானங்கள் சிறுநீர் வெளியேற உதவுவதால், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில்லை. மென்பானங்களோ அதில் உள்ள பாஸ்பாரிக் அமிலத்தால் எலும்புகள், பற்களை கரைக்கிறது. அதில் உள்ள சர்க்கரை உடலின் எடையை கூட்டுவதோடு இன்னும் சில நோய்களை தரவல்லது. தண்ணீருக்கு நிகர் எதுவும் இல்லை !!
ஒரு நாளைக்கு தேவையான நீரை எப்படி அருதுவது என்பதற்கு மருத்துவர்கள் ஒரு எளிய வழி சொல்கிறார்கள். காலை உணவுக்கு முன் ஒரு கோப்பை, காலை உணவு உண்ட 2 மணி கழித்து ஒரு கோப்பை, மதிய உணவிற்கு அரை மணி முன் ஒரு கோப்பை, மதிய உணவு உண்ட 2 மணி கழித்து ஒரு கோப்பை, இரவு உணவிற்கு அரை மணி முன் ஒரு கோப்பையும் இரவு உணவு உண்ட ஒரு மணி கழித்து ஒரு கோப்பை என்றும் பழகிக்கொள்ளலாம். அதிக நீர் அருந்துவது தோலை வறட்சியாக்காமல் இருக்கவும் உதவும்.
நன்றி-பத்மா அர்விந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக