திங்கள், 15 மார்ச், 2010

யுகாதி

சந்திரனின் பிறை அடிப்படையில் அமாவாசை முடிவு முதல் அடுத்த அமாவாசை முடிவு வரை ஒரு மாதம் என்று கணக்கிடப்பட்டு, 12 மாதங்கள் ஒரு சந்திர வருடம் என்று அழைக்கப்படுகிறது. சந்திர மாதம் வளர் பிறை மற்றும் தேய்பிறை என இரு பாகங்களாக இருக்கும்.

16.3.2010 செவ்வாய் கிழமை அன்று காலை 2:30 மணி அளவில் பால்குன மாஸ அமாவாசை முடிந்து சைத்திர பிரதமை திதி பிறப்பதால் உதயத்தில் பிரதமை திதி உள்ள அன்று யுகாதி கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் சூரியனின் அடிப்படையில் வருடப்பிறப்பு அமைகிறது.



யுகாதி சாலிவாகன சகாப்தம் முதலாக கொண்டு கணக்கிடப்படுகிறது, வியாழன்கிரக அடிப்படையில் 60ஆண்டு சுழற்ச்சி அடிப்படையில் ஆண்டின் பெயர் இடம் பெறுகிறது. வரும் ஆண்டு விக்ருதி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது


சந்திரன் பௌர்னமி அன்று எந்த நட்சத்திரத்தின் அருகில் உள்ளதோ அந்த நட்சத்திரத்தின் பெயராலே மாதம் அழைக்கப்படும். உதாரணமாக சைத்ரமாதம் பௌர்னமி அன்று முழுநிலவு சித்திரை நட்சத்திரத்தின் இருக்கும்.



சந்திர மாதத்தின் அளவு: சராசரி: 29 நாள் 12 மணி நேரம் 44 நிமிடம்

சந்திர வருடத்தின் அளவு: 354.3672 நாட்கள்

சூரிய வருடம் – சந்திர வருட வேறுபாடு 10.89 நாள்



இப்படி வித்யாசப்படும் 10.89 நாளை 2.7 வருடத்திற்கு ஒரு முறை ஒரு கூடுதல் மாதம் சேர்த்து சூரிய வருடத்துடன்சமப்படுத்துவார்கள்.



எந்த சூரிய(சௌரமான)மாதத்தில் 2 அமாவாசைகள் வருகிறதோ அந்த சூரிய(சௌரமான) மாதத்திற்கு உள்வரும் சந்திரமாதம் அதிகமாதம் என்று அழைக்கப்படுகிறது. அதிகமாதத்தில் வரும் சந்திரமாதம் கணக்கில் கொள்ளாமல் அடுத்து வரும் சந்திரமாதம் அந்த சூரிய மாதத்தின் பெயராலே நிஜசந்திர மாதம் என்று அழைக்கப்படுகிறது.



புது வருடமான விக்ருதி ஆண்டில் சூரிய(தமிழ்) சித்திரை மாதத்தில் 2 அமாவாசைகள் வருவதால் அதில் வரும் “சந்திரமாதமான” வைசாக மாதம் “அதிகவைசாகம்” என்றும் அடுத்து சூரிய மாதமான வைகாசியில் வரும் சந்திரமாதம் “நிஜ வைசாகம்” என்றும் அழைக்கப்படும்.



வழிபாட்டு முறை:



அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக்கோலம் இட்டு, நிலைப்படிக்கு மாவிலை தோரணம் கட்டி, நல்லலெண்ணெய், சீயக்காய் தலைக்கு தேய்த்து குளித்து. புத்தாடை உடுத்தி, பூஜை அறையில் புது ஆண்டு நன்மைகளை தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இறைவனை வணங்கி, பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறுவார்கள்.



வேப்பம் பூ - மொட்டு, புளி நீர், வெல்லம், இளம் மாங்காய் துறுவல், பச்சை மிளகாய், உப்பு கலந்த அறுசுவை நீர் பருகுவார்கள்.



மதியம் அறுசுவையான உணவுகளை இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவார்கள். மாலையில் வாசலில் விளக்கேற்றிய பின்னர் கோவிலுக்கு சென்று வருவார்கள். உறவினர்கள்,பெரியவர்கள் காலில் வழுந்து ஆசிபெறுவதே இந்நாளில் மிக முக்கியமான வழக்கம் ஆகும்.



இந்நாளில் கலை கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுஅதில் கலைஞர்கள் சிறப்பிப்பார்கள்.



தமிழகத்திலும் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இன்றைய தினம் சிறப்பு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் தந்து கௌரவிக்கப்படுவார்கள்.



யுகாதி வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக