ஞாயிறு, 28 மார்ச், 2010

பத்தாம் வகுப்பு


பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் முதல் தாளில் கேள்வித்தாள் மாற்றிக்கொடுக்கப்பட்ட விவகாரத்தினை விவாதிக்கும் முன் ,சில விசயங்களை அலச வேண்டிஉள்ளது.

குளறுபடி நடந்த இடத்தில் ஒரு தலைமை ஆசிரியர் ,அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், தேர்வு அலுவலர் மற்றும் பறக்கும் படை என அனைத்து மதிப்புக்குரியவர்களும் இருந்தனர். விடை தாள் கொடுக்கப்பட்ட உடனே ,மாணவர்கள் தங்களுக்கு உரிய கேள்வி தாள் இல்லை...மாற்றித்தரவும் என வற்புறுத்தியுள்ளனர். ஆசிரியர் இது தான் உனக்குரியது என்று கூறி அமரச் செய்துள்ளார், மீண்டும் தேர்வு கண்காணிப்பாளர், தனி அலுவலர் , பறக்கும் படை என அனைவரிடமும் சொல்லியும் கேள்வி தாளை மாணவர்களால் மாற்ற முடிய வில்லை என்பது செய்தித்தாள் வழியாகவும், நண்பர்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது.

பாதிக்கப்பட்ட 29 மாணவர்கள் தேர்வு நடந்த பள்ளியில் , மெட்ரிக் மற்றும் எஸ்.எஸ். எல். சி. மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர். அப்படி இருக்கும் போது அருகில் உள்ள அரை மாணவர் விடை தாளை பார்த்து இருந்தாலே , இத் தவறை மாற்றி இருக்க முடியும். தலைமை கண்காணிப்பாளர் மற்றும் தேர்வு அலுவலர் முறையான பயிற்சி எடுத்திருப்பின் அல்லது நான்கு வகை வினாத்தாள் பற்றி போதுமான அறிவு பெற்று இருப்பின் மாணவர்களுக்கு சரியான விடைத்தாளை தந்திருக்க முடியும்.


" தேர்வு பணியினை பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவது இல்லை.அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் 'ஆளை விட்டால் போதும்'என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றனர். " தினமலர்.(25 மார்ச் 2010 ) .

அரசு கவனத்திற்கு ....ஏன் மூத்த ஆசிரியர்கள் தேர்வு பணியினை வாங்க மறுக்கின்றனர். ?
இளம் ஆசிரியர்கள் ஏன் பார்க்க துடிக்கின்றனர்...? இதுதான் வயது வித்தியாசம் ....அனுபவ முதிர்ச்சி . இன்று ஆசிரியப் பணி என்பது எலி வாங்கித்தந்த வேலை போல ஆகிவிட்டது. எலி வேலை வாங்கி தந்த கதையை கூறும் முன் ....மூத்த ஆசிரியர்களின் மன நிலை சொல்லி விடுகிறான்.

தங்கள் மாணவர்கள் தேர்வில் மதிப்பெண் அதிகம் எடுக்க வேண்டும் மற்றும் தேர்வு பணிக்கு சென்றால் மதியம் தம் மாணவர்களுக்கு பாடம் நடத்த வர முடியாது. தேர்வு பணிக்கான பள்ளியின் தூரமும் அதிகமாக இருக்கிறது, பணியினை முடித்து வகுப்புக்கு வர முடியாத நிலையில் மாணவன் படிப்பு பதிக்கப் படும் என்ற எண்ணத்தில் அநேகம் ஆசிரியர்கள் தேர்வு பணியினை வாங்க மறுக்கின்றனர் . இளம் ஆசிரியர்கள் எப்படி மதியம் இந்த மாணவர்கள் மற்றும் பள்ளிகளில் இருந்து தப்பிப்பது,மதியம் ஓய்வு எடுப்பது என்று நினைத்து தேர்வு பணியினை விரும்பி வாங்கி பார்கிறார்கள் என்பது எனக்கு தெரிந்த வகையில் உண்மை .

அரசு தேர்வு பணி முடிந்த பின்னும் பள்ளி செல்லும் ஆசிரியர்கள் பற்றி சர்வே நடத்தினால், நான் சொல்லுவது போல் மாணவர்கள் மீதும் , பள்ளியின் நன் மதிப்பின் மீதும் அக்கறை மற்றும் பற்றுள்ள ஆசிரியர்கள், அதுவும் மூத்த ஆசிரியர்கள் தான் அதிகம் பள்ளிக்கு வந்து பாடம் நடத்துவர்.இது எல்லா நிலை மாணவர்களுக்கும் பொருந்தும் . பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே பிற மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு நடத்த வேண்டிஉள்ளது.
அதுவும் தேர்வு பணி வாங்க மறுப்புக்கு காரணம் ஆகும்.

அரசு எல்லா விசயங்களுக்கும் பயிற்சி அளிக்கிறது. இனி வரும் காலங்களிலாவது இது போன்ற விடை தாள் மாற்று குளறுபடி ஆகாமல் தடுக்க , தேர்வுக்கு முன்னே அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்துவது எப்படி?விடைத்தாள் வகைகளை அறிவது எப்படி? மாணவனுக்கு உரிய விடை தாளை வழங்குவது எப்படி ?மாணவனின் முறையிடுகளை உடனே அரசு கவனத்திற்கு அல்லது அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது எப்படி ? என்பது போன்ற பயிற்சிகளை வழங்குவது அவசியம் ஆகும் .

பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அவன் முந்தைய தேர்வில் எடுத்த மதிப்பெண் வைத்து , மதிப்பெண் தருவதால் மட்டும் பாதிக்கப் பட்ட மாணவனின் மன நலனை திருப்பி தரமுடியுமா? அதனால் அவன் பிற தேர்வுகளில் பின் தங்கி போவதற்கும் வாய்ப்பு உள்ளதே! . கல்வியாளர்கள் மாணவன் நலம் பற்றி சிந்தித்தால் இது போன்ற தவறுகள் நடக்காது.

ஆசிரியர்களை தண்டிப்பதால் மட்டும் இனி வரும் காலங்களில் இத்தவறுகள் நடக்காது என்பதற்கு என்ன உறுதி? தேர்வு பணிக்கு ஆசிரியர்கள் செல்லாததனால் தான் கேள்வி தாள் குளறுபடியை சரி செய்ய முடியவில்லை என்று கூறும் முதன்மை தேர்வு அதிகாரியின் பேச்சையும் கவனிக்க வேண்டும். தண்டனை பெற்று அப்பணியினை தொடருவதை விட தவிர்ப்பது நல்லது என்ற மனநிலையும் தேர்வு பணி மறுப்புக்கு காரணமாகவும் அமையலாம். ஆகவே , முறையான பயிற்சி , தேர்வு பணி குறித்து அச்சம் போக்குதல் போன்றவற்றால் மட்டுமே நாம் சரி செய்திட முடியும் .

மத்திய அரசினை போன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வினை ரத்து செய்து, பனிரண்டாம் வகுப்பில் மட்டுமே பொது தேர்வினையும் நடத்தி , உயர் கல்வியில் மாணவன் சேர்வதற்கு , மாணவனின் அனைத்து திறன் வெளிப்படும் வகையில் அகில இந்திய அளவில் தேர்வு நடத்தி , மாணவன் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அவனுக்கு மருத்துவம், பொறியியல் மற்றும் பிற துறை சார்ந்த படிப்புகள் தொடர நடவடிக்கை எடுத்தால் , ஆசிரியர்களும் மாணவனுக்கு மதிப்பெண் சார்ந்த கல்வியை தராமல் , மாணவன் திறன் சார்ந்த கல்வியை தந்து மாணவனின் முழு திறமை வெளிப்பட உழைப்பார். ஆசிரிய பணியும் எலி கொடுத்த வேலையாக அமையாது.


அது என்ன எலி கதை என நீங்கள் கேட்பது புரிகிறது. ஒரு ஊரில் எலி அதிகம் தொல்லை தந்தது , அந்த கிராமம் முழுவதும் ஒன்று கூடி, அனைவரும் பூனை வளர்ப்பது என முடிவெடுத்தனர். பூனை வளர்க்க பால் தேவை பட்டது , அனைவரும் வீட்டிற்கு ஒரு பசுமாடு பாலுக்காக வளர்ப்பது என முடிவெடுக்கப்பட்டது. பசு வளர்க்க அனைவரும் புல் வளர்க்க வேண்டும் என முடிவெடுத்து வயலுக்கு உழைக்க செல்வது என முடிவெடுத்து , வேலைக்கு சென்றனர். அப்போது தம் குழந்தைகள் தேவையிலாமல் சண்டை போடுவது கண்டு , கிராமம் அந்த ஊருக்கு அருகில் உள்ள படித்த இளைஞருக்கு வேலை தருவது எனவும் அதற்க்கு சம்பளம் கிராம பொது சபை கொடுப்பது எனவும் முடிவெடுத்து , வேலை கொடுக்கப்பட்டது. மாணவனுக்கு அதாவது தம் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க ஆசிரிய பணி அல்ல , குழந்தைகளை கண்காணிக்க , சண்டைபோடாமல் பாதுகாக்க தரப்பட்ட வேலை . இது கிராம குழந்தைகள் நலம் கொண்டு ,அறிவு வளர்க்க ஏற்படுத்தப்பட்ட வேலை அன்று. எலி கொடுத்த வேலை.

சமச்சீர் கல்வி கொண்டுவரும் நம் தமிழக அரசு தயவு செய்து மத்திய அரசை போன்று பொது தேர்வினை ரத்து செய்து ,மாணவன் நலனில் அக்கறை கொண்டு மாணவன் அனைத்து திறன் பேரம் வகையில் அட்டை கல்வி கொண்டுவந்ததை போன்று , மதிப்பெண் கல்வி முறையை நீக்கி , கல்லூரி கல்வியில் அவனின் அனைத்து திறனும் சோதிக்கும் வகையில் பொது தேர்வு நடத்தி, அதில் அவன் பெற்ற தகுதியின் அடிப்படையில் மாணவனுக்கு உரிய படிப்பினை கொடுப்பதன் மூலம் தமிழக கல்வி துறை இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழலாம்.


அரசு கவனத்தில் கொண்டு வர நீங்களும் நல்ல கருத்துகள் பகிர்ந்து , தமிழக மாணவர்கள் கல்வி நலனில் பாடுபட அனைவருக்கும் விஷயத்தை எடுத்து செல்லுவோம் , சொல்லுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக